மூன்றாம் உலக போர் - வைரமுத்து

கடைசியாக நான் படித்த புத்தகங்களில் கொஞ்சம் பெரியது...

காதலையும் விவசாயத்தையும் நன்கு ஆராய்ந்து அணு அணுவாய் பிரித்து அதன் அத்தனை கூறுகளையும் நமக்கு எடுத்தூட்டுவதில் தனக்கு நிகர் தானாக திகழும் வைரமுத்துவின் விவசாயம் குறித்த மற்றுமொரு தவிர்க்க முடியாத சகாப்தம்....

புவி வெப்பமயமாதலும், உலகமயமாதலும் தனியார்மயமாதலும் தாராளமயமாதலும் சேர்ந்து வேளாண்மையின் அத்தனை கூறுகளின் மீதும் தொடுத்திருக்கும் போர் தான் இந்த *மூன்றாம் உலகப் போர்*....

இயல்பில் விவசாய நாடான இந்தியாவில்
ஒரு சாதாரண கிராமத்தில் *ஏழ்மையில் செல்வந்தராக* வாழும் ஒரு சாதாரண விவசாயி கருத்தமாயின் கதை...

கருத்தமாயிக்கு ரெண்டு தலைமுறையா கழியாத கடன், ஒரு தலைமுறையா பேச்சுவார்த்தை இல்லாத மனைவி, பாசத்தை காட்டி வளர்த்தாலும் நெஞ்சில் ஆலகால விஷத்தை கொண்ட மூத்த மகன், பிறந்த கிராமத்தை முன்னுதாரணமாக மாற்றி மீண்டும் கிராம விவசாயத்திற்கு புத்துணர்வூட்டிய இளைய மகன், கண்ணுக்கு கூட மழைய காட்டாத மேகம், கஞ்சிக்கு கூட விளையாத மண்...

இந்த மண்ணை ஒட்டுமொத்தமாக மலடாக்க நினைக்கும் தற்கால மனிதனின் ஒட்டுமொத்த உருவத்தின் உருவகமாக மூத்த மகன் முத்துமணி...

இழந்த தன் கிராம மண்ணின் மகத்துவத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் முதல் படியில் இளைய மகன் சின்னபாண்டி...

நிலத்தின் பேரில் கடன் பெற்று மீளாத ஒரு விவசாயி, நிலத்தை விற்று பட்டணம் போய் பகுசாய் வாழலாம் என்று நினைத்து மீண்டும் கிராம எல்லையில் வந்து விழுந்த ஒருவன் என கதையோட்டத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் உள்ளுக்குள்ள ஒருமாதிரி உளுக்கிட்டு தான் போச்சி...

பூமியின் உள்ளூர் பிரச்சனைகளை சின்னபாண்டியும், உலக பிரச்சனைகளை எமிலியும் இஷிமுரா வடிவிலும் கூறப்படுகிறது...

கதையின் ஊடாக தாவரங்களின் பண்புகள், மருத்துவ தன்மை, அவை இயற்கைக்கு வழங்கும் சேவைகள் மற்றும் புவி வெப்பமடைவதால் இதுவரை ஏற்பட்டவைகளையும் இனி ஏற்பட வாய்ப்புள்ளவைகள் என பற்பல ஆராய்ச்சி தகவல்கள தெரிவிப்பது அருமை...

கிராமத்தை பிளாஸ்டிக் இல்லாத, செயற்கை உரம் இல்லாத முன்னுதாரண கிராமமாக மாற்ற சின்னபாண்டி மேற்கொண்ட முயற்சிகளும் அதில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் மேலும் அதன் மாற்றத்திற்கான விதை இளைய சமுதாயத்திடமும், பள்ளி சிறுவர்களிடமும் சேர்த்த விதமும் அருமை...

இந்த புத்தகத்திலிருந்து எந்த எடுத்துக்காட்டையும் கூற விரும்பவில்லை ஏனென்றால் குறைந்தபட்சம் எனக்கு விருப்பமான வரிகளை மட்டும் சொல்ல வேண்டும் என்றாலும் நானும் ஒரு பெரிய புத்தகத்தை எழுதவேண்டியிருக்கும்..

முழு நாவலிலும் பெரும்பாலும் உலக வெப்பமயமாதலின் விளைவுகளும், விவசாயிகளின் பிரச்சனைகளும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது விவசாய நிலங்களில் விவசாயம் குறைந்து  பெரிய பெரிய கம்பெனிகளாகவும், அப்பார்ட்மெண்ட் கட்டிடங்களாகவும் இன்ன பிறவுமாக மாற முக்கிய காரணமான *நிலங்கொத்தி பறவைகளான* கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்து எதோ சொல்ல முற்பட்டு விட்டுவிட்டது போல் உள்ளது...

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அளிக்கப்பட்ட இந்த பூமியை மனிதர்களாகிய நம்மால் முடிந்த வரை நாசப்படுத்திவிட்டோம்... இனி நம் அடுத்த தலைமுறைக்கு இந்த பூமியை இப்படியே வழங்கவே நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது... அதில் என்னாலான மாற்றங்களை கண்டிப்பாக உதவியாக அல்லாமல் கடமையாக செய்யவேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக இந்த புத்தகம் என்னுள் விதைத்துவிட்டது...

எந்தவொரு நல்ல புத்தகமும் கண்டிப்பாக நம்மில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் எனக்கு இப்புத்தகம் ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது பெருமகிழ்ச்சி...

மனித காதலுக்கு மட்டும் கஞ்சத்தனமாக இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே...
அதில் சின்னபாண்டி தன் காதலை சொல்ல தயங்கும் போது இந்தாளு(வைரமுத்து) எப்ப நம்ம மனசுக்குள்ள புகுந்து நமக்கு நடந்ததை அப்படியே சொல்றாரேனு தோனுச்சி...

வாய்ப்பு கிடைத்தவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி இப்புத்தகத்தை கண்டிப்பாக படிக்கவும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் வாய்ப்பை தேடியாவது படிக்கவும்....

~தமிழ்திரு.இர.யுவராஜ்

Comments

Popular posts from this blog

வாசிப்பனுபவம் - பட்டாம்பூச்சி புத்தகம்