வாசிப்பனுபவம் - பட்டாம்பூச்சி புத்தகம்

#புத்தக_வாசிப்பனுபவம்...

#பட்டாம்பூச்சி - #ஹென்றி_ஷாரியர்

படிக்கின்ற ஒவ்வொரு புத்தகமும் நமக்கு ஓர் ஆசான் போன்றது... அதாவது ஒவ்வொரு நல்ல புத்தகமும் நமக்கு ஏதோ ஒன்றை மண்டையில் சுத்தியல் கொண்டடித்தாற் போல சொல்லிக் கொடுக்கத்தான் செய்கின்றன...

இந்த புத்தகம் எனக்கு வாழ்க்கையில் போராட கற்றுக் கொடுத்தது... அதாவது வாழ்வில் எத்தனை முறை வீழ்ந்தாலும் வீழ்ந்த உடனேயே எழுந்து நின்று போராட கற்றுக் கொடுத்தது...

இது ஒரு பிரெஞ்சு ஆயுள் தண்டனை சிறைக் கைதி ஹென்ரி ஷாரியர் (பட்டாம் பூச்சி) எழுதிய 854 பக்கங்களை கொண்ட சுய வரலாற்று புத்தகம்...

சுதந்திரமாக பறக்க இயற்கை கொடுத்த இறக்கைளில் தன் 25ம் வயதில் செய்யாத குற்றத்திற்காக விலங்கிட்டு சிறையில் அடைக்கப்பட்டு தப்பிக்க முயல்வதும் மீண்டும் மீண்டும் மாட்டிக்கொண்டு மனித தன்மை அறவே அற்று போன சிறைகளில் அடைக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் தப்பிக்கும் முயற்சியில் 13 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெறுவதே இந்நாவல்...

படிக்கும் நம் மனதை எழுச்சிக் கொள்ளத்தக்க தருணங்கள் பல உள்ளன இந்நூலில்...

கதை மாந்தர்கள் வழியில் உண்மையான நட்பு, மனிதநேயம், காதல், கடற்பயணங்கள் என படிக்க எடுத்த புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவிற்கு சாகசங்கள் நிறைந்ததும், விறுவிறுப்பான மொழிநடையும் கொண்ட புத்தகம்...

எத்தனை முயற்சிகள்...
எத்தனை உழைப்புகள்...
எத்தனை இழப்புகள்...
எத்தனை மனஉறுதி...
எத்தனை தண்டனைகள்...
அனைத்தும் தோல்வி...தோல்வி...

இவை எல்லாவற்றையும் கடந்து தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்ற ஒரு காரணம் கொண்டே போராடுகிறான்... தன் உயிரை பணயம் வைத்து போராடுகிறான்...

பட்டாம்பூச்சியுடன் சுதந்திரமாக பறக்க நினைத்து முயற்சித்த பல பட்டாம்பூச்சி நண்பர்கள் உண்டு இந்நாவலில்... அவை அனைத்தும் ஏதாவது ஓரிடத்தில் தங்கள் நிலையினை ஏற்றுக்கொண்டு கட்டுபாடுள்ள சுதந்திரத்தில் பாழ பழகிவிடுகின்றனர் அல்லது சிறகொடிந்து / சிறகொடிக்கப்பட்டு பறக்க முடியாமல் போய்விடுகின்றனர்... ஆனால் எந்த நிலையிலும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து பட்டாம்பூச்சி மட்டும் சிறகடிச்சிக்கொண்டே இருந்தது... ஒரு நாள் பறந்தும் விட்டது...

புத்தகத்தின் தனிமை சிறை அத்தியாயங்களை வாசிக்கும் பொழுதெல்லாம் நான் என் வீட்டிற்கு வெளியே வந்து "ஆம் நான் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன்" என்று என்னை நானே உறுதிப்படுத்தி கொள்வேன். அந்தளவிற்கு புத்தகம் உயிரோட்டமாக இருந்தது...

உண்மையிலேயே இது "மயிர் கூச்ச செய்யும் மானிட சாசனம்" தான்...

புத்தகப்பிரியர்கள் கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டிய புத்தகங்களில் ஒன்று "பட்டாம்பூச்சி"

~இர.யுவராஜ்

பட்டாம்பூச்சி - ஹென்றி ஷாரியர்
தமிழில் - ரா.கி.ரங்கராஜன்
நர்மதா பதிப்பகம்
பக்கங்கள் - 854
விலை ₹400

Comments

Popular posts from this blog