நேற்று பேருந்து பயணத்தில்...
நல்ல மழை பெய்தாலும் அரசு பேருந்தின் மூடமுடியாத ஜன்னல் கதவு கொண்ட ஜன்னலோர இருக்கை....
ஆனால் என்னை தவிர யாரும் நனைய வாய்ப்பில்லை...
பக்கத்துல ஒரு பாட்டி... வயசு எப்படியும் நாலு ராஜ் வயசு இருக்கும் போல...அதாவது 90-95 வயசு இருக்கும்...இந்த வயசுல தனியா பஸ்ல...அதுவும் ஒரு கைல தடி, மறு கைல ஒரு மூட்டை...பார்வை மட்டும் இப்பவோ அப்பவோனு விருப்பமில்லாமல் பாட்டியிடம் ஒட்டிகிட்டு இருந்தது...
கொஞ்ச நேரத்தில பாட்டி பக்கத்துல ஒரு ராஜ் வயசுல்ல பொண்ணு உட்கார்ந்தாங்க....
பாட்டி கொஞ்சம் வசதியா உட்கார்ந்து கொண்டதால் நான் நல்லா நனைஞ்சிட்டேன்...அதுவும் நல்லாதான் இருந்ததுனு மழைய வேடிக்கை பார்த்துகிட்டே வந்தேன்...
அப்ப நடத்துனர் வந்து பாட்டிகிட்ட டிக்கெட் எடுக்க சொன்னாரு... காது மட்டும் நல்லா கேட்கும் போல... பாட்டி டக்குனு தன்னோட சுருக்கு பையின் அடி ஆழத்தில இருந்த ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து கை நடுக்கத்தின் காரணமாக செல்ல மறுத்த பணத்தை ஒரு வழியா அவரிடம் சேர்த்தது...
அவர் பாட்டிமா இன்னும் 20₹ தாங்கனு சொன்னதும் அவர் என்ன மொழியில் பேசுகிறார் என யோசிப்பதை போல அவரையே பார்த்துகிட்டே இருந்தாங்க...
அவர் திரும்பவும் கேட்டதும்...திரும்பவும் அதே சுருக்கு பை...அதே தேடல்...அதே துழாவல்...இப்ப திவாலாக துடித்துக்கொண்டிருந்த பாட்டியின் கருவூலத்தில இருந்து ஒரு 10₹ தாளின் தலை மட்டும் எட்டி பார்க்க முயற்சி செய்தது...
ஆனால் அது தான் அதன் கடைசி நோட்டு என எனக்கு தெரிந்தது... உடனே நான் பாட்டியின் கையை தடுத்து என் ₹20யை நடத்துனரிடம் கொடுத்தேன்...
அவர் கொஞ்ச நேரம் என்னை பார்த்துட்டு அந்த பாட்டியின் ₹5யை பாட்டியிடமே கொடுத்துட்டு இது என்னோட பங்கா இருக்கட்டும்னு சொல்லிட்டு டிக்கெட்டை கொடுத்துட்டு போயிட்டாரு....
கொஞ்ச நேரத்துல அந்த பாட்டி பக்கத்துல இருந்த பொண்ணு என்ட ஒரு 10₹யை கொடுத்துட்டு சார் இதுல என்னோட பங்கும் இருக்கட்டும் சார்னு சொல்லிச்சி... அத வாங்க மனமில்லாவிட்டாலும் ஒருவரின் உதவும் குணத்தை தடுக்கக்கூடாது என்பதால் புன்சிரிப்புடன் பெற்றுக்கொண்டேன்...
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கும் போது மழை நின்றுவிட்டிருந்தாலும் மனதுக்குள் மட்டும் ஏதோ ஒன்று ஜில்லென்று மழையாக பெய்துகொண்டிருந்தது....
சென்ற தலைமுறைக்கு நாம் குழந்தை...
அதற்கு முன் தலைமுறை நமக்கு குழந்தை...
~UV

Comments
Post a Comment